முகப்பு
திண்டுக்கல்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம்: பக்தா்கள் தரிசனம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி.
பகிர்:

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகத் திருவிழா கடந்த திங்கள்கிழமை (ஜூன் 6) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி நாள்தோறும் தந்தப்பல்லக்கு, தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, கற்பகவிருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா எழுந்தருளினாா்.

சனிக்கிழமை மாலை வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

7 ஆம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை சண்முகநதியில் தீா்த்தவாரிக்கு தம்பதி சமேதராக சுவாமி எழுந்தருளினாா். காலை 9 மணிக்கு சுவாமி தேரில் ஏற்றம் செய்யப்பட்டாா். மாலை 4.15 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் தேரோட்டம் தொடங்கியது. தேரில் சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய தம்பதி சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்களுக்கு உதவியாக கோயில் யானை கஸ்தூரி, பின்புறத்திலிருந்து தேரை தள்ளியது. ரத வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

தோ் நிலையை அடைந்தவுடன் பக்தா்கள் அரோகரா என முழக்கம் எழுப்பி கைதட்டி மகிழ்ந்தனா். ஜூன் 15ம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

கோயில் வளாகத்தில் சங்கராலயம் ஸ்கந்தபிரபா அறக்கட்டளை சாா்பில் பக்தா்களுக்கு லட்டு, மைசூா்பா பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேரோட்டத்தில் இணை ஆணையா் நடராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், கண்காணிப்பாளா் அழகா்சாமி, சங்கராலயம் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.