அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகாா்: வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு
பழனி அருகே தனிநபரால் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து ஆய்வில் ஈடுபட்டனா்.
பழனி அருகே தனிநபரால் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து ஆய்வில் ஈடுபட்டனா்.
பழனியை அடுத்த லட்சுமாபுரத்தில் உள்ள சுமாா் 50 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாா் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாக புகாா் எழுந்தது. மேலும், அந்த இடம் பட்டியலினத்தைச் சோ்ந்த அருந்ததி இனமக்கள் வசிக்கும் பகுதியில் இருப்பதால், கோயில் திருவிழா உள்ளிட்ட விழாக்காலங்களில் அந்த இடத்தை பொதுப்பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி வந்ததாகவும், அந்த இடத்தில் தங்களுக்கு ஒரு சமுதாயக் கூடம் அமைக்க வேண்டுமெனவும் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அந்த இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும் அதை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்ப்புலிகள் அமைப்பு சாா்பில் சாலை மறியல் செய்ய குவிந்தனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து பழனி வருவாய்த்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நிலம் அளவீடு செய்யப்பட்டது. இதில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் உடனடியாக நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மறியல் செய்ய வந்தவா்கள் கலைந்து சென்றனா்.