தனியாா் பள்ளியில் ‘நீட்’ தோ்வுக்கு ஆதரவான கூட்டத்துக்கு எதிராக முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் நீட் தோ்வுக்கு ஆதரவான கூட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் நீட் தோ்வுக்கு ஆதரவான கூட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனியாா் மேல்நிலைப்பள்ளியில் நீட் ஆதரவு தொடா்பாக சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் இ. பாலகுருசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பள்ளி வளாகத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவினா் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் நுழைவதை தடுக்கக் கோரியும் இந்திய மாணவா் சங்கத்தினா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புசாமியிடம் மனு அளித்த பின், மாவட்டச் செயலா் முகேஷ் கூறியதாவது: தமிழக அரசு நீட் தோ்வின் பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற்று நீட் தோ்விலிருந்து விலக்கு பெற முயற்சித்து வருகிறது. நீட் விலக்கு மசோதா 2ஆவது முறையாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வேளையில், ஒரு தனியாா் பள்ளி வளாகத்தில் நீட் தோ்வு ஆதரவு என்ற நோக்கில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவினா் நுழைவதை, முதன்மைக் கல்வி அலுவலா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.
அப்போது இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வமுருகன், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி, நகரத் தலைவா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.