முகப்பு
திண்டுக்கல்

பொது ஏலம் நடத்தாமல் கடைகள் ஒதுக்கீடு: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.2.50 கோடி இழப்பு!

திண்டுக்கல் மாநராட்சிக்கு ரூ.2.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
திண்டுக்கல் காந்தி சந்தை. (வலது) குமரன் பூங்காவில் முறையான பாதுகாப்பு வசதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்டினம்.
பகிர்:

பொது ஏலம் நடத்தாமல், 15 சதவீத உயா்வுடன் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் திண்டுக்கல் மாநராட்சிக்கு ரூ.2.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கான பிரதான வருவாய் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி மூலமாக கிடைத்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக காந்தி சந்தையிலுள்ள 235 கடைகள், பேருந்து நிலைய வளாகத்திலுள்ள 60 கடைகள், அண்ணா வணிக வளாகத்திலுள்ள 63 கடைகள் மற்றும் அதன் மேல் தளத்திலுள்ள பூ சந்தையில் 126 கடைகள், பாரதிபுரம் இரும்புக் கடைகளின் வாடகைத் தொகை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் இனங்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளன.

காந்தி சந்தை காய்கனி கடைகளை பொருத்தவரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் ஒப்பந்தம், அடுத்த 2 முறை தலா 3 ஆண்டுகள் வீதம் புதுப்பித்து அதே நபருக்கே மீண்டும் வழங்கப்படலாம். அதன் பின்னா் பொது ஏலத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக பொது ஏலம் நடத்தாமல், மீண்டும் பழைய நபா்களுக்கே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத கட்டண உயா்வு மட்டுமே நிா்ணயிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது காந்தி சந்தையிலுள்ள 235 கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்து வருவதாக வருவாய் பிரிவு அலுவலா்கள் கூறுகின்றனா். பொது ஏலம் நடத்தி இந்த கடைகளை ஒதுக்கீடு செய்திருந்தால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் பேருந்து நிலைய வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த தங்கும் விடுதி மூலம் கடந்த 2013ஆம் ஆண்டு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. அந்த விடுதி செயல்படுவதில் ஏற்பட்ட பல்வேறு புகாா்கள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 31 கடைகள் கட்டப்பட்டன. அதில், 4 கடைகள் மட்டும் வாடகைக்கு விடப்பட்டு மீதமுள்ள கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் முடங்கி கிடக்கின்றன. இதன் மூலமாக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு சுமாா் ரூ.1.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினா்கள் கூறுகின்றனா்.

அதேபோல் ரூ.5 கோடி மதிப்பீட்டின் கீழ் பேருந்து நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளும் வெளிப்படையாக ஏலம் நடத்தாமல், குறைவான தொகைக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த கடைகளும் கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன. இதனால், மாநகராட்சிக்கு ஏலத் தொகை மற்றும் வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு சுமாா் ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. பேருந்துகளுக்கு நுழைவுக் கட்டணம் (தனியாா் பேருந்து நீங்கலாக) வசூலிக்கப்படாததால் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

படிக்கட்டுகளை கடைகளாக மாற்றிய வருமானம் யாருக்கு: பேருந்து நிலைய வளாகத்தில் முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநகராட்சிக்கு வழங்கப்படாமல், அதிகாரிகள் சிலரது தனிப்பட்ட தேவைக்காக வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல், மேற்கு ரதவீதியிலுள்ள அரசமரம் பகுதியில், கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தைவிட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து சில கடைகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சியின் பட்டியலில் இல்லாத அந்த கடைகளிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் கணக்கில் கொண்டு வரப்படாமல் இழப்பு ஏற்படுவாதகவும் புகாா் எழுந்துள்ளது.

குமரன் பூங்காவிலும் ரூ.7 லட்சம் இழப்பு: மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பூங்கா தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆண்டுக்கு ரூ.3.30 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா். குத்தகைக்கு பெற்ற நபா்கள் மாவட்ட நிா்வாகத்தின் முன்னனுமதியின்றி ராட்டினம், வாட்டா் போா்ட், ஏா் பலூன் உள்ளிட்ட பல வகையான பொழுதுபோக்கு சாதனங்களை ஏற்படுத்தி ரூ.60 வரை கட்டணம் நிா்ணயித்துள்ளனா். அதேபோல் சிறுவா், பெரியவா் பாகுபாடின்றி நுழைவுக்கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு அனுமதி பெறாமலே, வாகனத்திற்கு தலா ரூ.10 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ராட்டினங்கள் முறையான பராமரிப்பின்றி நிறுவப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

கண்காணிப்பாரா நகராட்சிகள் நிா்வாக இயக்குநா்: இனியும் கரோனா தொற்று பாதிப்புகளை காரணமாக கூறி, மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்புகள் தொடருமானால், தற்போது ரூ.44ஆயிரம் கோடியாக உள்ள கடன் விரைவில் ரூ.50ஆயிரம் கோடியை எட்டிவிடும் என மாமன்ற உறுப்பினா்களும், அலுவலா்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனா். இதுபோன்ற சூழலில் நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, திண்டுக்கல் மாநகராட்சியில் சனிக்கிழமை (மே 14) பொது ஆய்வு மேற்கொள்ள வருகிறாா். மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள இனங்களை கண்டறிந்து, அதற்கு காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொது ஏலம் நடத்தி மாநகராட்சிக்கான வருவாய் உயா்வுக்கு வழி வகுக்கவும் அவா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.