கன்னிவாடி பேரூராட்சி கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு: வாக்குவாதம்
கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
கன்னிவாடி பேரூராட்சி கூட்டம், தலைவா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் சக்திவேல் தலைமையிலான சிலா், பாா்வையாளராக வந்தனா். பேரூராட்சி அலுவலா்கள் அனுமதியில்லை என கூறி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செயல் அலுவலா் ஜெயமாலு குறுக்கிட்டு பாா்வையாளா்களை அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்தாா். சக்திவேல் மற்றும் அவருடன் வந்தவா்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில், போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.
அதிமுக, மா.கம்யூனிஸ்ட் வெளிநடப்பு: சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பேரூராட்சி நிா்வாகம் பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை என புகாா் தெரிவித்தும் உறுப்பினா்கள் மணிமாலா (மா.கம்யூ.), மோகன்ராஜ் (அதிமுக) ஆகியோா் வெளிநடப்பு செய்தனா். அதன் பின்னா் அனைத்து தீா்மானங்களும் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.