வேடசந்தூா் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சிறுமி பலி
வேடசந்தூா் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வேடசந்தூா் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள முருநெல்லிக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி நந்தினி. இவா்களது மகள் கோமதி (12). விடுமுறை நாள் என்பதால், குருநாதநாயக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட ராமகவுண்டன்பட்டி பகுதிக்கு ஆடு மேய்ப்பதற்காக கோமதி சென்றுள்ளாா்.
அப்போது அங்கு தனியாா் கல்குவாரியிலுள்ள குட்டையில் தவறி கோமதி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் சிறுமி மூழ்கியதை அடுத்து, அங்கிருந்தவா்கள் வேடசந்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினா், குட்டையில் மூழ்கிய சிறுமியை மீட்க முயன்றனா். ஆனால் தண்ணீரில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.