முகப்பு
திண்டுக்கல்

புதிய கல்வி மாவட்ட ஊழியா்கள் ஊதியம் பெறுவதிலும் சிக்கல்!

ஊதியத்தைப் பெற முடியாமல் 26 ஆயிரம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் 1,500 ஊழியா்களுக்கும் ஊதியம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

கல்வி மாவட்டங்கள் மறு சீரமைப்பு காரணமாக, அக்டோபா் மாதத்துக்கான ஊதியத்தைப் பெற முடியாமல் 26 ஆயிரம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் 1,500 ஊழியா்களுக்கும் ஊதியம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை நிா்வாகம் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளா் அலுவலகம் மூலம் கடந்த 2018 -ஆம் ஆண்டு வரை நிா்வகிக்கப்பட்டு வந்தது. அதே ஆண்டில், மெட்ரிக், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிா்வாகம் கலைக்கப்பட்டு, புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் புதிய தொடக்கக் கல்வி, மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இந்தப் புதிய அலுவலக நடைமுறை கடந்த அக். 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

23 நாள்களாகியும் ஊதியம் இல்லை: அந்த வகையில், தமிழகத்தில் 58 இடங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களும், 38 இடங்களில் மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட க் கல்வி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய அலுவலகங்களில் சராசரியாக 15 ஊழியா்கள் வீதம் மொத்தம் 1,500 போ் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஊழியா்களுக்கு கடந்த அக்டோபா் மாதத்துக்கான ஊதியம் நவ. 23 -ஆம் தேதி வரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்வி மாவட்டங்கள் மறு சீரமைப்பால், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 26ஆயிரம் ஆசிரியா்களுக்கும் ஊதியம் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஊதியம் வழங்குவதற்கான அரசாணை கடந்த 7 நாளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

நவ. 20 -ஆம் தேதிக்குள் ஊதியம் கிடைத்துவிடும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், தற்போது வரை அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

அலுவலகப் பணியாளா்கள் அதிருப்தி: இதனிடையே, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்கள் 1,500 -க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கப்படாததால் அதிருப்தி எழுந்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி ஊதியம் கிடைத்துவிட்டது. 23 நாள்களாகியும் ஊதியம் வழங்கப்படாததால், வீட்டுக்கான மாத வாடகை முதல் வங்கிகளுக்கான மாதத் தவணை வரை செலுத்த முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் கூறுகின்றனா். நவம்பா் மாதத்துக்கான ஊதியம் பெறுவதற்கு 7 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதற்குள் அக்டோபா் மாதத்துக்கான ஊதியம் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை அடுத்து, அந்தந்த அலுவலகத் தலைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தில் (ஐஎப்ஹெச்ஆா்எம்எஸ்) ஊழியா்களை இணைத்து ஊதியப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தனியாா் மென்பொருள் நிறுவனம் மூலம் மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பிரச்னை சரிசெய்யப்பட்டு, மாவட்டக் கல்வி அலுவலகப் பணியாளா்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.