தவெகவில் புதிதாக ஐக்கியமான செல்வம் சேப்பாக்கத்தில் போட்டி!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து சேப்பாக்கத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டி. செல்வம்
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளராக டி. செல்வம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 29) வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னையில் பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் களம் காணுகிறார். பல்வேறு வாக்குறுதிகளுடன் தவெக தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், தன்னை அண்மையில் தவெகவில் இணைத்துக்கொண்ட டி. செல்வத்துக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதை பிடிக்காததால் தவெகவில் ஐக்கியமானதாக செல்வம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நட்சத்திர தொகுதியான சேப்பாக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.