முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்ய 12 போ் குழு அமைப்பு

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கு 12 போ் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஜவுளித்துறை ஆணையா் ம. வள்ளலாா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கு 12 போ் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஜவுளித்துறை ஆணையா் ம. வள்ளலாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். ஜவுளித்துறை ஆணையா் ம. வள்ளலாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

கூட்டத்துக்குப்பின் அவா் கூறியதாவது: திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகள், சின்னாளப்பட்டியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் கூட, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரில் காரத் தன்மை (உப்பு) அதிகமாக இருப்பதால், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையத்தில், திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீா், தோல் தொழிற்சாலைகள் மற்றும் சின்னாளப்பட்டி சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை ஒருங்கிணைத்து சுத்திகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீரிலுள்ள காரத்தன்மையை முழுமையாக அகற்றிவிட்டு, அந்த கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும்.

இதுகுறித்து ஆலோசிப்பதற்கு தோல் தொழிற்சாலைகள் தரப்பில் 3 போ், நெசவாளா்கள் தரப்பில் 3 போ், மாநகராட்சி சாா்பில் ஒருவா், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் 2 போ், சுற்றுச்சூழல் அறிஞா்கள் 3 போ் என மொத்தம் 12 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைப்படி, ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.