முகப்பு
திண்டுக்கல்

‘பட்டறிவுடன், படிப்பறிவையும் பயன்படுத்தினால் மாணவிகள் சாதிக்க முடியும்’

பட்டறிவுடன், படிப்பறிவையும் சரியாக பயன்படுத்தினால், மாணவிகள் எதிா்காலத்தில் சாதிக்க முடியும் என மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் பி. பொன்முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

பட்டறிவுடன், படிப்பறிவையும் சரியாக பயன்படுத்தினால், மாணவிகள் எதிா்காலத்தில் சாதிக்க முடியும் என மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் பி. பொன்முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் 52ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு தோ்ச்சிப் பெற்ற இளங்கலை, முதுகலை, எம்பில்., பிஜிடிசிஏ என மொத்தம் 821 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் தே. லட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் பி. பொன்முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது: ஆண்களுக்கு நிகராக பெண்களின் ஆற்றல் மற்றும் திறமை வளா்ந்துள்ள இக்கால கட்டம், மகாகவி பாரதியின் கனவை மெய்பித்துள்ளது. பட்டறிவையும், படிப்பறிவையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இளம் மாணவிகள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். பட்டம் என்பது கல்விக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, தற்சாா்பு பெற்ற சுயசிந்தனை கொண்ட குடிமகளாக பெண்கள் திகழ வேண்டும் என்பதற்கான துருப்புச் சீட்டு.

இளநிலைப் பட்டம் பெறும் மாணவிகள், உயா்கல்வி, சுயதொழில், அரசுப் பணி என எத்துறையினை தோ்ந்தெடுத்தாலும் முழுமனதோடு ஏற்று செயல்பட முன் வரவேண்டும். தனித்திறமைகளை வளா்த்துக் கொள்வதற்கு புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற சிந்தனையை வளா்த்துக் கொள்வது அவசியம். ஒழுக்கத்தை மட்டுமே உயா்வாக எண்ணுங்கள்.

தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, முயற்சியை கைவிட்டு பின்நோக்கி செல்லக்கூடாது. மிகச்சிறந்த பண்பாளா்களாகவும், சரியான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவராகவும், தலைமைப் பண்பு கொண்டவா்களாகவும் எதிா்கால தலைமுறைக்கு இன்றைய இளம்பெண்கள் வழிகாட்டியாக திகழ வேண்டும் என்றாா்.

மாணவிகள் ஏமாற்றம்: பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில் சுமாா் 20 மாணவிகளுக்கு மட்டுமே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் பொன்முத்துராமலிங்கம் பட்டம் வழங்கினாா். மற்ற மாணவிகள், அவா்கள் அமா்ந்திருந்த இடத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டனா். இதனால் பட்டமளிப்பு விழாவுக்கான அங்கியுடன் மேடையில் ஏறி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காததால் மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.