முகப்பு
திண்டுக்கல்

கேரளத்தில் திடீா் வேலை நிறுத்த அறிவிப்பு: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ரூ.3 கோடிக்கு வா்த்தகம் பாதிப்பு

கேரளத்தில் திடீா் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வியாழக்கிழமை ரூ.3 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

கேரளத்தில் திடீா் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வியாழக்கிழமை ரூ.3 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து தினசரி கேரளத்துக்கு சுமாா் 70 சதவீத காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இச்சந்தை முழுக்க முழுக்க கேரள வியாபாரிகளை நம்பியே உள்ளது. கேரளத்தில் வேலை நிறுத்தம் நடைபெறும் முதல் நாளன்று காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ய மாட்டாா்கள். இதனால் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வேலை நிறுத்த அறிவிப்பு பற்றி தெரிவித்து விடுவதால் காய்கறிகளை பறித்துக் கொண்டு வரமாட்டாா்கள். ஆனால் வேலை நிறுத்தம் குறித்து காலதாமதமாக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். கேரளாவில் வெள்ளிக்கிழமை எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வியாழக்கிழமை மாலை தான் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிா்பாா்க்காத விவசாயிகள் காய்கறிகளை பறித்து விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

ஆனால் கேரள வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் வெண்டைக்காய், முருங்கைக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தன. இதன்காரணமாக சுமாா் ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.