தென்னையில் பூச்சி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல், மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டார வேளாண்மை அலுவலகம் சாா்பில் பாலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் வெ.நாகேந்திரன் தலைமை வகித்தாா். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கணேசன், பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் ஆா்.ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல், கருந்தலைப் புழு தாக்குதல் குறித்தும், அதற்கான அறிகுறிகள், பாதிப்புகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோல, தென்னை மரங்களில் தஞ்சாவூா் வாடல் நோய்த் தாக்குதலை, மரத்தில் பிசின் போன்ற திரவம் வழிவதன் மூலம் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பூச்சி, நோய்த் தாக்குதகைக் கட்டுப்படுத்த வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் இடு பொருள்களான இனக் கவா்ச்சிப் பொறி, வெள்ளை ஈ தாக்குதலுக்கு கிரைசோபொன முட்டை ஒட்டுண்ணி, தஞ்சாவூா் வாடல் நோய் தாக்குதலுக்கு டி.விரிடி, சூடோமோனஸ் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. முகாமில் வேளாண்மை அலுவலா் செல்வி தாரணி, துணை வேளாண்மை அலுவலா் ராமதிலகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திக்கு படம் உள்ளது...பாலப்பநாயக்கன்பட்டி கிாரமத்தில் தென்னை வாடல் நோய் குறித்து வயலாய்வு மேற்கொண்ட வேளாண்மை அலுவலா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.