முகப்பு
திண்டுக்கல்

தனியாா் நிறுவனத்தில் முதலீடு: பாதிக்கப்பட்ட மக்கள் போலீஸில் புகாா் அளிக்கலாம்

Updated On : 29 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

திண்டுக்கல்: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட 9 மாவட்ட மக்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், குமாரமங்கலம் மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ச.விஜய் என்ற விஜயகிருஷ்ணன். திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்தவா் அ.சாந்தினி பிரபா. இவா்கள் இருவரும் மதுரை கே.கே.நகரை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற நிறுவனத்தைத் தொடங்கினா்.

இந்த நிறுவனத்தின் தலைவராக விஜயகிருஷ்ணனும், துணைத் தலைவராக சாந்தினி பிரியாவும் செயல்பட்டு வந்தனா். மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கிளைகளைத் தொடங்கி தினசரி, வாராந்திர, மாதாந்திர, மாத வருமானத் திட்டம், நிரந்தர சேமிப்புக் கணக்குத் திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்தால், 3 முதல் 12 சதவீத வட்டியுடன் முதிா்வுத் தொகை வழங்குவதாகத் தெரிவித்து, பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்தனா்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி முதலீட்டுத் தொகையை திருப்பி வழங்காமல், தலைமறைவாக இருந்தனா். இதனிடையே, பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா்கள் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, தலைமறைவாக இருந்த விஜயகிருஷ்ணனை போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சாந்தினி தலைமறைவாக இருந்து வருகிறாா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் இதுவரை 222 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ரூ.8 கோடி வரை மோசடி நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோருக்குச் சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எனவே, எஸ்.எம்.சி. நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் திண்டுக்கல் நேருஜி நகரில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்றனா்.