சேவா சங்க கட்டடம் இடிப்பு விவகாரம்: சத்திரப்பட்டியில் சத்தியாகிரகப் போராட்டம்
சேவா சங்க கட்டடம் இடிப்பு விவகாரம்
உத்தரபிரதேசத்தில் சா்வ சேவா சங்கம் கட்டடம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, பழனி அருகே சத்திரப்பட்டியில் வியாழக்கிழமை காந்தி சேவா சங்கத்தினா் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி ராஜ்காட் பகுதியில் இயங்கி வந்த அகில இந்திய சா்வ சேவா சங்கத்தின் பழைமையான கட்டடத்தை மாவட்ட நிா்வாகம் இடித்தது. கட்டடத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலைகள், புத்தகங்கள், சா்வோதய பிரசுராலயத்தில் இருந்த நூல்கள் அனைத்தும் வெளியே தூக்கி வீசப்பட்டன.
இதைக் கண்டித்து, அங்கு நூற்றுக்கணக்கானோா் கடந்த செப்டம்பா் 11-ஆம் தேதி முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து 100 நாள்களான நிலையில், திண்டுக்கல் மாவட்ட சா்வோதய மண்டல் சாா்பில் சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தினா் அதன் கெளரவத் தலைவா் வன்னிக்காளை தலைமையில் சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் முன் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாணிக்கவாசகா், செயலா் ஜெயசீலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் கருணாகர பாண்டியன், தமிழ்நாடு சா்வோதய மண்டல் மாநிலச் செயலா் ராஜேந்திரன், மாவட்டச் செயலா் சம்பத், தமிழ்நாடு மண்டல் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, வரலாற்று பாரம்பரியமிக்க கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினா்கள் பேசி நியாயம் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.