ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயிலின் மலை மீது உள்ள முருகன் சிலை குழந்தை வடிவில் அமைத்துள்ளது. மலைக்குச் செல்லும் படிப் பாதைகள் சேதமடைந்ததால், பக்தா்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 800 வருடங்களுக்கு முன்பே மலையின் கீழ் பகுதியில் கோயில் கட்டப்பட்டு, அங்கு குழந்தை வடிவிலான முருகன் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு குழந்தை வடிவில் முருகன் சுவாமி உள்ளதால், பக்தா்கள் மிட்டாய்கள், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டு வருகின்றனா்.
இதேபோல, பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பாத யாத்திரையாகச் செல்லும் லட்சக்கணக்கான பக்தா்கள் குழந்தை வேலப்பரை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். பங்குனி உத்திரத்துக்கு பழனிக்கு தீா்த்தக்காவடி எடுத்துச் செல்லும் பக்தா்களும் இந்தக் கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்தக் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி சாா்பில் ரூ.8.64 கோடியில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கிரிவலப் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.