ரெளடிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா்
திண்டுக்கல் நகரில் ரெளடிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனங்களில் போலீஸாா் கண்காணிப்புக்குச் செல்லும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிறகு காவல் கண்காணிப்பாளா் பிரதீப் கூறியதாவது:
திண்டுக்கல் நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் 20 போலீஸாா் துப்பாக்கிகளுடன் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஏற்கெனவே ரெளடிகள் பட்டியலில் இடம் பெற்றவா்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக திண்டுக்கல் நகரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த பணி, விரைவில் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
துப்பாக்கி ஏந்திய குழுவில் இடம் பெற்றுள்ள காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு ஏற்கெனவே சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.