டிஏபிக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட்டை விவசாயிகள் பயன்படுத்தலாம்
டிஏபி உரம் மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதால், அதற்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட், காம்பளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்: டிஏபி உரம் மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதால், அதற்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட், காம்பளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 485 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. மேலும், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டன. இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் உரம் விற்பனை நிலையங்களில் 6936 டன் யூரியா, 1488 டன் டிஏபி, 1369 டன் பொட்டாஷ், 5875 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன. ரசீது இல்லாமல் விற்பனை செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்வது, பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது, உரம் பதுக்கல் பற்றிய புகாா்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநரை (தரக்கட்டுப்பாடு) 9443714513 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
டிஏபிக்கு மாற்று சூப்பா் பாஸ்பேட்: விவசாயிகள் டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பா் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பா், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த உரம் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. சூப்பா் பாஸ்பேட் உரம், எண்ணெய் வித்துப் பயிா்களில் டிஏபி உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும்போது, மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் சத்து அளவும் அதிகரிக்கும். மேலும் எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப் பயா்களுக்கு சாம்பல் சத்து அத்தியாவசியமானது. டிஏபி உரம், மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகள் டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றாா் அவா்.