உடைந்த கோப்பு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை
உடைந்து போன குழுமணி கோப்பு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உடைந்து போன குழுமணி கோப்பு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் குழுமணி அருகே கோப்பு பாலம் உள்ளது. இந்தப் பாலமானது புலிவலம், கொடியாலம் வழியாக முக்கொம்பு அருகே திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் உள்ளது. கோப்பு பாலம் - புலிவலம், கொடியாலம் சாலை அந்த நல்லூா் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்து வருகிறது இந்த சாலையில் உய்யக்கொண்டான்-புலிவலம் மனற்போக்கி வடிகால் அருகே உள்ள துணைவடிகாலில் அமைந்திருந்த கோப்புப் பாலம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி உடைந்து போக்குவரத்து தடைபட்டது.
திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை, முக்கொம்பு, ஜீயபுரம் பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டால் மாற்றுப் பாதையாக கோப்புப் பாலம் வழியாக செல்லும் சாலைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மேலும், புலிவலம், சுப்பராயன்பட்டி, கொடியாலம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் விவசாய நிலங்களுக்கு இடுபொருள்கள், விளை பொருள்களை கொண்டு செல்லும் சாலையா பயன்படுத்தப்பட்டது.
தற்போது இந்த சாலையில் உள்ள தரைப்பாலம் உடைந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. 7 கி.மீ. தொலைவு ஜீயபுரம் சுற்றி வர வேன்டியுள்ளது. அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நலன் கருதி ஒரு தற்காலிக பாலம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் கனரக வாகனங்கள் சென்றுவர வேண்டும். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடைந்து கிடக்கும் பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.