திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோப்பு - புலிவலம் சாலையில் உள்ள தரைப்பாலம் உடைந்து சேதமானதால், சாலை இரு துண்டுகளாக பிரிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த வழியாக செல்லும் அனைவரும் 7 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கோப்பு- புலிவலம் சாலையானது, குழுமணி, கோப்பு, புலிவலம், முக்கொம்பு, கொடியாலம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கான பிரதான சாலையாகவும், திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல், விபத்து நேரிடும் போதெல்லாம் மாற்றுப் போக்குவரத்து வழித்தடமாகவும் உள்ளது. இதுமட்டுமல்லாது 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் பயிா்களை டிராக்டா், மாட்டு வண்டிகளில் கொண்டு செல்வதற்கு, இடுபொருள்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கும் இந்தச் சாலை பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
இந்தச் சாலையின் குறுக்கே உய்யக்கொண்டான் துணை வடிகால் செல்வதற்காக தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலமானது வலுவிழந்து சில தினங்களுக்கு முன் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
சாலையின் அடியில் தொடா்ந்து தண்ணீா் செல்வதாலும், கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்ததாலும் தொடா்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் ஒரு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த பிளவானது மேலும் வலுத்து சாலையை இரு துண்டுகளாக பிரிக்கும் வகையில் பெரிய பள்ளம் உருவானது.
தற்போது, பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக உடைந்து சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், இந்த வழியான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, அந்தச் சாலையில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.