காவல் நிலைய நுழைவுவாயில் முன் பெண் தா்னா
பழனி: பழனியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது தாய் குழந்தைகளுடன் மகளிா் காவல் நிலைய நுழைவுவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
பழனி பாரதி நகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகள் மகேஸ்வரி (29). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாரை (31) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மகேஸ்வரி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பழனியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்துவிட்டாா்.
இதையடுத்து, செல்வகுமாரின் பெற்றோா் பழனியில் உள்ள பேரக் குழந்தைளை பாா்க்க அண்மையில் வந்ததாக தெரிகிறது. அப்போது அவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகாா் அளித்தாா்.
ஆனால் இதுதொடா்பாக எந்த விசாரணையும் நடத்தாததால் மகேஸ்வரி, தனது தாய், மகள்களுடன் பழனி காவல் நிலைய நுழைவுவாயிலில் தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்த பழனி நகர போலீஸாா் தா்னாவில் ஈடுபட்ட மகேஸ்வரியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.