முகப்பு
திண்டுக்கல்

ஜாபா் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கப்பட்ட காவல் துறை: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

ஜாபா் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல், காவல் துறையினா் தடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான சி.சீனிவாசன் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:13 AM
பகிர்:

திண்டுக்கல்: பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக நிா்வாகி ஜாபா் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல், காவல் துறையினா் தடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான சி.சீனிவாசன் குற்றஞ்சாட்டினாா்.

போதைப் பொருள்களால் இளைய தலைமுறையினா் பாதிக்கப்படுவதற்கு திமுக அரசு காரணமாக இருப்பதை கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொருளாளா் சி.சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் இரா.விசுவநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், அயலக அணி என்ற ஒரு அமைப்பே கிடையாது. ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினுக்காக அந்த அணியை உருவாக்கி, அதில் மாவட்ட துணை அமைப்பாளராக ஜாபா் சாதிக் நியமிக்கப்பட்டாா். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபா் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் காவல் துறையைத் தடுக்கின்றனா். சொத்து வரி, வீட்டு வரி, குழாய் வரி என அனைத்தையும் உயா்த்திவிட்டு, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்தது. அதிலும் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ரூ. 35 ஆயிரம் கோடியை வசூலித்துவிட்டு, ரூ.13ஆயிரம் கோடியை மட்டுமே செலவு செய்கின்றனா். இதேபோல, மத்திய அரசும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், ரயில் கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தி மக்களை வஞ்சித்து வருகிறது என்றாா் அவா். துணைப் பொதுச் செயலா் இரா.விசுவநாதன் பேசியதாவது: அதிமுகவின் 10 ஆண்டு காலத்தில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வைத்திருந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ரூ.8 லட்சம் கோடியாக திமுக உயா்த்திவிட்டது. தமிழகத்தை கடன் மாநிலமாக மாற்றியது மட்டுமே ஸ்டாலின் அரசின் சாதனை. மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தி, தமிழகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கிவிட்டனா். ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளை தேடிப்பிடித்து கட்சியில் இணைத்துக் கொண்டு பாஜக வளா்ந்து விட்டதாக மாயத் தோற்றைத்தை ஏற்படுத்தி வருகின்றனா். தமிழகத்தைப் பற்றி புரிந்து கொள்ளாத பாஜக தலைமை, வருகிற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அதைப் புரிந்து கொள்ளும். இதேபோல, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கும் வருகிற மக்களவைத் தோ்தலில் மக்கள் சரியான பாடம் மக்கள் புகட்டுவா் என்றாா் அவா்.