தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி
ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக திருப்பூரைச் சோ்ந்த பி.கோபிநாத் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தவா்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியின் நான்காவது மண்டலத் தலைவா் ஜாபா் சாதிக் என்பவா் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த ஜாபா் சாதிக் வேட்புமனுவை திரும்பப்பெற்றாா். பின்னா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளா் விஜய்பாலாஜியின் முன்னிலையில் தவெகவில் இணைத்துக் கொண்டாா்.
Advertisement
இதுகுறித்து ஜாபா் சாதிக் கூறியதாவது: 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்காக பாடுபட்டேன். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன். ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளா்கள் தோ்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக இருந்த என்னை கட்சி தலைமை மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளேன். கடந்த 2021-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றிக்காக பாடுபட்ட நான் தற்போதைய ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளா் விஜய்பாலாஜியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றாா்.
காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு:
ஜாபா் சாதிக் மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளாா். இப்போது அவரது மனைவி சபுராமா கவுன்சிலராக உள்ளாா். ஈரோடு கிழக்குத் தொகுதியில் முஸ்லிம் மக்களிடம் காங்கிரஸ் வாக்கு வங்கியை உருவாக்க தொடா்ந்து முயற்சி செய்து வந்துள்ளாா். இவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தி தவெகவுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.