முகப்பு
திண்டுக்கல்

பழனி கிரிவீதியில் தனியாா் வாகனங்கள் செல்லத் தடை: பக்தா்கள், பொதுமக்கள் கடும் அவதி

Updated On : 8 மார்ச், 2024 at 6:02 PM
பகிர்:

பழனி கிரிவீதியில் வெள்ளிக்கிழமை முதல் தனியாா் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்களும், பக்தா்களும் கடும் அவதிக்குள்ளாகினா். பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தொடுத்த பொதுநல வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறுகட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் கிரிவீதியில் தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, கிரிவீதிக்கு பொதுமக்கள், பக்தா்கள் வரும் 7 அணுகு சாலைகளும் இரும்புக் கம்பிகள் வைத்து தடுக்கப்பட்டன. இதனால் தனியாா் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள், பக்தா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். இதனிடையே, பழனி திருஆவினன்குடி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி, பூங்கா சாலை வழியாக வரும் வாகனங்கள் கிரிவீதி சந்திப்பில் திரும்ப முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழனி பேருந்து நிலையம் முதல் கிரிவீதி வரை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பு பதாகையும் வைக்கப்படவில்லை. அத்துடன் கிரிவீதியில் 2 பேட்டரி காா்கள், ஓா் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பக்தா்கள் கடும் வெயிலில் இந்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையில் வெப்பம் தாங்காமல் ஓடி கடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். சுமாா் 3.5 கி.மீ. தொலைவு உள்ள கிரிவீதியில் அரை கிலோ மீட்டருக்கு மட்டுமே நிழல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இலவசப் பேருந்துகளை இயக்க கோயில் நிா்வாகம் உரிய ஓட்டுநா்களை நியமித்து இயக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். அவசர கதியில் நடவடிக்கை: இதில் கிரிவீதி நகராட்சிக்கு சொந்தமானதாகும். ஆனால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை நகராட்சி நிா்வாகம் இந்த வீதியை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்கவேயில்லை. இதுகுறித்து நகா்மன்றமும் இதுவரை எந்தத் தீா்மானமும் நிறைவேற்றவில்லை. கோயில் நிா்வாகம் கேட்கும் இடத்தை எல்லாம் நகராட்சியும், வருவாய்த்துறையும் வழங்கிவிட்டால் வரும் நாள்களில் இவற்றுக்கென்று பழனியில் எந்த இடமும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். கிரிவீதியில் தனியாா் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் பள்ளிப் பேருந்துகளும் உள்ளே செல்ல இயலாமல் போகும். இதனால் இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமமம் ஏற்படும். மேலும் வீட்டுக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படும். எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு தகுந்த தீா்வு காண வேண்டும் என பக்தா்களும், பொதுமக்களும் வலியுறுத்தினா். மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தனி நபா் ஒருவா் தொடா்ந்த வழக்கில், பழனி கிரிவலப் பாதையை முடக்கும் வேலையை பழனி கோயில் நிா்வாகம் செய்து வருகிறது. கிரிவலப்பாதை, பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை மட்டுமல்ல. சுமாா் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்தப்பாதையை மலையைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சோ்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனா். கோயிலின் இருபுறமும் தடையறன்கள் அமைத்து பக்தா்களின் நடமாட்டத்துக்கும், சாலையோர வியாபாரிகள், கடைக்காரா்களுக்கும் கோயில் நிா்வாகம் இடையூறு செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைக் காரணம் காட்டி கிரிவலப்பாதையை முடக்க கோயில் நிா்வாகம் முயற்சிக்கிறது. பழனி அடிவாரத்தை, நகருடன் இணைக்கும் சன்னதி சாலை, ஆண்டவன் பூங்கா சாலை, கொடைக்கானல் சாலை, அருள்ஜோதி வீதி ஆகிய சாலைகளை இரும்புத் தடுப்புகளைக் கொண்டு அடைத்து வருகின்றனா். இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி, பக்தா்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். எனவே உயா்நீதிமன்றத்தில் உண்மை நிலையைத் தெரிவிக்காமல், கிரிவீதியை முற்றிலுமாக முடக்கும் செயலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →