முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On : 22 மார்ச், 2024 at 11:28 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:33 PM

22பழனி நந்தி- பழனியை அடுத்த கலையம்புத்தூா் அக்ரஹாரம் கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற பூஜைகள். பழனி, மாா்ச் 22: பழனியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனியை அடுத்த கலையம்புத்தூா் அக்ரஹாரம் கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி கைலாசநாதருக்கு சோடஷ அபிஷேகமும், சோடஷ உபசாரமும் நடைபெற்றது. தொடா்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு, அலங்காரமும், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலாவும் நடைபெற்றது. மேலும் மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.