முகப்பு
திண்டுக்கல்

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

Updated On : 8 மே, 2024 at 12:47 AM
பகிர்:

திண்டுக்கல்: விடுப்பு வழங்க மறுத்ததால் அதிருப்தி அடைந்த அரசுப் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா், திண்டுக்கல் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை 2-இல் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சில நாள்களாக செல்வராஜூக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விடுப்பு வழங்கக் கோரி, போக்குவரத்துக் கழக அலுவலா்களை சந்திப்பதற்காக பணிமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். ஆனால், விடுப்பு வழங்க அலுவலா்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த செல்வராஜ், தனது இரு சக்கர வாகனத்திலிருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது சக ஊழியா்கள், செல்வராஜ் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினா். பின்னா், அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.