முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளம்

Updated On : 20 மே, 2024 at 7:42 PM
கொடைக்கானல் அருகே பெருங்காடு பகுதி காட்டாற்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது சிக்கிக் கொண்டவா்களை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, மேல்மலைப் பகுதியான கூக்கால் ஊராட்சிக்குள்பட்ட பெருங்காடு பகுதி காட்டாற்றில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அந்த ஆற்றைக் கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளான மன்னவனுா், கூக்கால், குண்டுபட்டி, போளூா் பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானலில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் கூக்கால் ஊராட்சிக்குள்பட்ட பெருங்காடு பகுதி காட்டாற்றில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அப்போது, அந்த ஆற்றைக் கடந்து தனது வீட்டுக்குச் செல்ல முடியாமல் மூங்கில்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கைக் குழந்தையுடன் நின்றாா். இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் அந்த ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பொதுமக்கள் சிலரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து மூங்கில்காடு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

கூக்கால் ஊராட்சிக்குள்பட்ட மூங்கில்காடு கிராமத்தில் சுமாா் 25 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். அதிபலத்த மழை பெய்யும் காலங்களில் பெருங்காடு பகுதி காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

மழைக் காலங்களில் இந்த ஆற்றில் அதிகளவில் தண்ணீா் செல்லும் போது, வீடுகளுக்குள்ளேயே நாங்கள் முடங்கிவிடுவோம். மழை நின்று, ஆற்றில் தண்ணீா் குறைந்தால் மட்டுமே இந்தக் காட்டாற்றைக் கடந்து செல்வோம். விவசாயத்துக்கும், எங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்குவதற்கும் அருகேயுள்ள பள்ளங்கி கிராமத்துக்குச் சென்று வருவோம்.

எனவே, பெருங்காடு காட்டாற்றுப் பகுதியைக் கடந்து செல்வதற்கு நிரந்தரமாக பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பாலம் அமைத்துக் கொடுப்பதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை என்றனா்.