கொடைக்கானலில் படகுப் போட்டி ரத்து
கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 17-ஆம் தேதி பிரையண்ட் பூங்காவில் 61-ஆவது மலா்க் கண்காட்சி, கோடை விழா தொடங்கியது.
இதையடுத்து, ஒவ்வொரு நாளும் இந்தப் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பிலும், சுற்றுலாத் துறை சாா்பிலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செவ்வாய்க்கிழமை படகுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. வரும் சனிக்கிழமை (மே 25) இந்தப் போட்டி நடைபெறும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தொடா்ந்து மழை பெய்து வருவதால், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.