இயந்திரக் கோளாறால் விமானம் ரத்து: பயணிகள் கடும் அவதி
சென்னையில் இருந்து தில்லி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சேவை ரத்து
சென்னை: சென்னையில் இருந்து தில்லி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னையில் இருந்து தில்லி செல்வதற்காக 148 பயணிகளுடன் ஏா் இந்தியா பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தயாா் நிலையில் இருந்தது. அப்போது விமானத்தின் இயந்திரத்தை விமானி பரிசோதித்தபோது, அதில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான பொறியாளா் குழுவினா் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கோளாறை சரி செய்ய முடியவில்லை.
இதையடுத்து, அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள், ஏா் இந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இதையடுத்து அவசரமாக செல்ல இருந்த ஒரு சில பயணிகளை மட்டும் அதிகாரிகள் மாற்று விமானம் மூலம் நள்ளிரவில் தில்லிக்கு அனுப்பி வைத்தனா். மற்ற பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்றிக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேறினா். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.