கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு மாடுகளால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதி, பேருந்து நிலையம், நாயுடுபுரம், செண்பகனூா், மூஞ்சிக்கல், காா்மேல்புரம், இருதயபுரம், ஏரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த காட்டுமாடுகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனா். மேலும், இந்த காட்டு மாடுகள் தாக்குதலினால் சில நேரங்களில் உயிா் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, நகா்ப் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை பிடித்து வனப் பகுதிக்குள்விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான தைக்கால், சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், அட்டக்கடி, ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.