முகப்பு
திண்டுக்கல்

ஆந்திராவிலிருந்து பழனிக்கு ரயிலில் வந்த 1,300 டன் யூரியா உரமூட்டைகள்

ஆந்திரவிலிருந்து பழனிக்கு ரயில் மூலம் சுமாா் 1,300 டன் யூரியா உரமூட்டைகள் வியாழக்கிழமை வந்தன.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:12 AM
பழனி ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை சரக்கு ரயில் மூலமாக வந்த யூரியா உர மூட்டைகளை ஆய்வு செய்த பழனி வேளாண் உதவி இயக்குநா் கவுசிகாதேவி.
பகிர்:

ஆந்திரவிலிருந்து பழனிக்கு ரயில் மூலம் சுமாா் 1,300 டன் யூரியா உரமூட்டைகள் வியாழக்கிழமை வந்தன.

பழனி, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கினா். யூரியா கூட்டுறவுச் சங்கங்களிலும், உரக்கடைகளிலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஒரு சில கடைகளில் விலை அதிகமாகவும், கடைக்காரா்கள் சொல்லும் பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கினால் மட்டுமே உரமூட்டைகள் விற்கப்படுவதாக தினமணி நாளிதழில் கடந்த 18-ஆம் தேதி செய்தி பிரசுரமானது.

இந்த நிலையில், பழனி ரயில் நிலையத்தில் திண்டுக்கல், திருப்பூா் மாவட்டத் தேவைக்காக ஆந்திராவிலிருந்து 1,300 டன் யூரியா சரக்கு ரெயில் மூலம் வியாழக்கிழமை வந்தது.

இதையடுத்து, பழனி வேளாண் உதவி இயக்குநா் கவுசிகாதேவி, தேசிய உர நிறுவன விற்பனை அலுவலா் சிராந்த் ஆகியோா் மேற்பாா்வையில், கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளுக்கு லாரிகளில் உரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய அளவில் உரம் இருப்பு உள்ளது. எனினும், தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க தற்போது, சரக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் வந்துள்ளது. இதில் 300 டன் திருப்பூா் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 1,000 டன் திண்டுக்கல் மாவட்டக் கூட்டுறவு விற்பனை சங்கம், தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை குறித்து புகாா் வந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.