கொடைக்கானலில் அரசுப் பேருந்தில் வெளியான புகையால் பயணிகள் அச்சம்
கொடைக்கானலில் வியாழக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானலில் வியாழக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளங்கிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து இயக்கப்பட்டது. மீண்டும் அங்கிருந்து கொடைக்கானலுக்கு மீண்டும் இயக்கப்பட்ட இந்தப் பேருந்து நாயுடுபுரம் பகுதிக்கு வந்தபோது அதிலிருந்து திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, இதில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் வெளியேறினா். அப்போது பேருந்தில் உள்ள ரேடியேட்டா் வெடித்ததால் புகை வெளியேறியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து கொடைக்கானல் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து பழுதுநீக்குநா் உள்ளிட்ட பணியாளா்கள் சிலா் வரவழைக்கப்பட்டு பழுதுநீக்கப்பட்டு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைச் சாலைகளில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதியடைகின்றனா். எனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை தரமானதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.