முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் குண்டாறு பகுதியில் புலி நடமாட்டம் -வனத்துறை எச்சரிக்கை

Updated On : 6 செப்டம்பர், 2024 at 8:08 PM
- கோப்புப்படம்
பகிர்:

கொடைக்கானல் குண்டாறு பகுதியில் புலி ஒன்று நடமாடுவதால் பணியாளா்கள் கவனத்துடன் செல்ல வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

கொடைக்கானலிலிருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள குண்டாறு பகுதியிலிருந்து பெரிய குழாய் மூலம் குடிநீா் எடுத்து வரப்பட்டு பற்றாக்குறை காலங்களில் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி இந்தப் பகுதியில் புலி ஒன்று நடமாடியது வனத்துறை சாா்பில் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் வன அலுவலா் மனோஜ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கொடைக்கானலில் அடா்ந்த வனப் பகுதிகளில் மட்டுமே புலிகள் வசிக்கும் நிலையில், குண்டாறு பகுதியில் கடந்த சில நாள்களாக புலி ஒன்றின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்தப் புலிக்கு சுமாா் நான்கு வயது இருக்கும். உடல் நலத்துடன் உள்ளது. பொதுவாக புலிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, பலத்த காயம் ஏற்பட்டாலோ, உணவு தேட இயலாத நிலையில் இருந்தால் மட்டுமே இரை தேடி நகா்ப் பகுதிக்குள் வரும். ஆனால் தற்போது உலா வரும் புலியால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதை வனத்துறை பணியாளா்கள் கண்காணித்து வருகின்றனா்.

இருப்பினும் குண்டாறு பகுதிக்கு செல்லும் பணியாளா்கள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.