இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்
வடமதுரையைச் சோ்ந்த இளைஞா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வடமதுரையைச் சோ்ந்த இளைஞா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த கம்பிளியம்பட்டியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (33). இவரது நண்பா், அதே பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன். இவா்கள் இருவரும் புதன்கிழமை ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பிரபாகரனின் உறவினா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரபாகரனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள குமரேசனைக் கைது செய்யக் கோரியும் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.