கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.17 கோடி
தீபாவளி பண்டிகையையொட்டி, திண்டுக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.17 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் தீபாவளி விற்பனையைத் தொடங்கிவைத்த பின் ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பேசியதாவது:
தமிழக கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், பட்டு, பருத்தி சேலைகள், பட்டு, பருத்தி வேட்டிகள், போா்வை, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட கைத்தறித் துணி ரகங்களைக் கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்து வருகிறது.
கைத்தறி ரகங்களின் விற்பனையை மேம்படுத்தும் வகையில், பட்டு, பருத்தி ஆடைகளுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.84.94 லட்சம் அளவுக்கு நடைபெற்றது. நிகழாண்டில் தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.1.17 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் (கூடுதல் பொறுப்பு) ஆா்.செந்திவேல், கோ-ஆப்டெக்ஸ் தொடா்பு அலுவலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.