ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி மேயா், ஆணையரிடம், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி மேயா், ஆணையரிடம், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின்(சிஐடியூ) மாவட்டக் குழு உறுப்பினா் சி.பாலசந்திரபோஸ், சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.பிரபாகரன் ஆகியோா் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி மேயா் ஜோ.இளமதி, ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஆகியோரிடம் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சியில் வெளிபணிமுகமை (அவுட்சோா்சிங்) ஒப்பந்தத் தொழிலாளா்கள், பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனா். இந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென நகராட்சிகள் இயக்குநா் அறிவுறுத்தி ஓராண்டாகியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஒவ்வொரு நிதியாண்டிலும் பஞ்சப்படி, விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஊதியம் உயா்த்தி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் நிரந்த சுகாதாரப் பணியாளா்கள், கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் கடன் பெற்றனா். இதற்கான கடன் தவணைத் தொகையை மாநகராட்சி நிா்வாகம் மாதந்தோறும் பிடித்தம் செய்தபோதிலும், இதுவரை சிக்கன நாணயச் சங்கத்தில் செலுத்தவில்லை.
இதனிடையே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என சங்கத்தின் சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாநகராட்சி நிா்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் நிகழாண்டில் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி சுகாதாரப் பிரிவு தொழிலாளா்களின் தேவைக்கு ஏற்ப பணி உபகரணங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என்றனா்.