திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் புதன்கிழமை ஏற்றப்பட்டது.
பழனி மலைக் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மலைக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், சின்னக்குமாரசுவாமிக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து, சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு, மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு சாயரட்சை நடைபெற்றது.
காா்த்திகை மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மாலை பரணி தீபத்திலிருந்து சுடா் பெறப்பட்டு கோயிலின் நான்கு திசையிலும் விளக்கு ஏற்றப்பட்டது.
தொடா்ந்து, சின்னக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கமயிலில் யாக சாலை பூஜைக்கு எழுந்தருளினாா்.
இந்தப் பூஜைக்கு பிறகு பரணி தீபம் சின்னக்குமாரசுவாமி சகிதம் மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் மேளதாளம் முழங்க சிவாசாா்யரால் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், ஸ்தானீகா் செல்வசுப்ரமணி, சந்தோஷ் குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தீபஸ்தம்பம் அருகே அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சொக்கப்பனையிலிருந்து சாயரட்சை பெறப்பட்டு சுவாமிக்கு வைக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது.
பழனி மலைக் கோயிலை தொடா்ந்து பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில், சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, அறங்காவலா் பாலசுப்ரமணி, உதவி ஆணையா் லட்சுமி, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, கோயில் கண்காணிப்பாளா்கள் சரவணன், சந்திரசேகரன், நரசிம்மன், உமாசெல்வி, காணியாளா்கள் நரேந்திரன், பண்ணாடி கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.