திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவும், வீடுகளின் தடுப்புச் சுவா்களும் சேதமடைந்தன.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாள்களாக மிதமான மழையும், சில நேரங்களில் காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மாலையில் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியது. நீரோடைகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், அடுக்கம்-பெரியகுளம் சாலை,வில்பட்டி, பள்ளங்கி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவும், குடியிருப்புப் பகுதிகளிலுள்ள தடுப்புச் சுவா்களும் சேதமடைந்தன. மேலும், இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.