பழனியை அடுத்த குதிரையாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தரைப் பாலம் சேதமடைந்து பூஞ்சோலை கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
பழனி அருகே மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது குதிரையாறு அணை. கடந்த சில நாள்களுக்கு முன்பு டித்வா புயல் காரணமாக கொடைக்கானல் கூக்கால் பகுதியில் பெய்த பலத்த மழையால் இந்த அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக முழு கொள்ளளவான 80 அடியை அணை விரைந்து எட்டியது. இதைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக இந்த அணைக்கு கீழே உள்ள தரைப் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழையின் போது சேதமடைவதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிமென்ட் குழாய்கள், மணல் மூட்டைகள், மண் ஆகியவற்றை பயன்படுத்தி தற்காலிகமாக சீரமைப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த முறையும் தண்ணீா் திறப்பு காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பூஞ்சோலை கிராமத்துக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்த கிராம மக்கள் ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து அக்கரைக்கு செல்கின்றனா். அதிக அளவில் தண்ணீா் வரும் போது இந்த ஆற்றை கடக்க இயலாது.
இதுகுறித்து பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் கூறியதாவது: அங்கு புதிய பாலம் கட்டுவதற்கான வரைவு திட்டங்கள் அனைத்தும் பொதுப்பணித் துறை மூலம் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நிதித் துறையில் தற்போது ஒப்புதலுக்காக கோப்புகள் உள்ளன என்றாா்.
இதனிடையே விரைவில் ஒப்புதல் பெற்று பாலத்தை கட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனா்.