பழனியில் ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் தற்காலிக உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் காா்த்திகை மாதம் தொடங்கினாலே பக்தா்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் ஐயப்ப, முருக பக்தா்களை குறிவைத்து அடிவாரம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தற்காலிக உணவகங்கள் புற்றீசலாக தொடங்கப்படுகின்றன.
இந்தக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், எந்தக் கடையிலும் விலைப்பட்டியலும் இருப்பதில்லை.
தரமற்ற உணவுப் பொருள்களை உண்ணும் பக்தா்கள் உடல்நலக்கோளாறுகளால் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய நகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை அலுவலா்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.
பழனி அடிவாரத்தில் பல இடங்களில் ஆங்காங்கே உணவகங்களில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக, வீட்டு உபயோக எரிவாயு உருளைகளும் எந்தவித பாதுகாப்புமின்றி பயன்படுத்தப்படுகின்றன. எனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பக்தா்கள் நலனைக் காக்கும் விதமாக அனைத்துக் கடைகளிலும் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.