தொடா் விடுமுறை காரணமாக, பழனியில் வியாழக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
அரையாண்டு தோ்வு விடுமுறை காரணமாக, பழனி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை வந்தனா். பின்னா், ரோப்காா், வின்ச் நிலையங்கள், படிப் பாதை வழியாக பக்தா்கள் மலையேறி சென்றனா்.
மலைக் கோயிலில் கட்டணம், இலவச தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.
மலைக் கோயிலில் பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.
அடிவாரம் கிரிவீதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையில், போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
மலைக் கோயிலில் தங்கத்தோ் புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சின்னக்குமாரசுவாமியை வழிபட்டனா்.
பக்தா் பணப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்கள்:
பழனி மலை அடிவாரம் கோசாலா சுற்றுலாப் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கா், மயில்சாமி ஆகியோா் பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு ஒரு பணப்பை கீழே கிடப்பதை பாா்த்தனா். அந்தப் பையில் அடையாள அட்டைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவோ இருந்தது.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா்கள் இருவரும் அடிவாரம் காவல் நிலையத்தில் பணப்பையை ஒப்படைத்தனா்.
விசாரணையில், பணப்பையை தவறவிட்டவா் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் (31) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை வரவழைத்து பணப்பையை ஒப்படைத்தனா்.
மேலும், பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்களை போலீஸாா் பாராட்டினா்.