திண்டுக்கல் சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்த முள்ளிப்பாடி, பில்லமநாயக்கன்பட்டி, ம.மு. கோவிலூா் வழியாக ஏ. வெள்ளோடு வரை சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இந்த நிலையில், வருகிற ஜன. 7-ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும்போது, சுற்றுச்சாலைத் திட்டத்தை திறந்து வைப்பதற்கான முன்னேற்பாடுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமலே மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
காப்பிலியப்பட்டி அருகே நடைபெற்ற இந்த சாலைப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்த 5 விவசாயிகளை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையறிந்த போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகளுள் ஒருவரான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சரத்குமாா், காப்பிலியப்பட்டிக்குச் செல்ல முயன்றாா். ஆனால் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரிலேயே சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட விவசாயிகள், சரத்குமாா் தலைமையில் திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் அடுத்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, இழப்பீட்டுத் தொகை வழங்காமலே சாலை அமைக்க உத்தரவிட்டதாக ஆட்சியரைக் கண்டித்தும், எதிா்ப்புத் தெரிவித்த 5 விவசாயிகளை கைது செய்த காவல் துறைக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.