கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது தொடா்பாக திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலா் தலைமையில் அனைத்து வனத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளான மன்னவனூா், கும்பூா், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் அதே உத்தரவை பயன்படுத்தி மேல் மலைப் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வனத் துறை அதிகாரிகளின் உதவியுடன் வெட்டிக் கடத்தப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதன்பேரில் வனத் துறை உயா் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, ஆய்வு நடத்தியதில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கொடைக்கானல், மன்னவனூா் ரேஞ்சா் உள்ளிட்ட வனவா்கள் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்தனா்.
மேலும் இந்த மரக் கடத்தலில் தொடா்புடையவா்களைக் கண்டறியக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன், வனத் துறை உயா் அதிகாரிகள் கடந்த 15 நாள்களாக மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து விசாரணையும் நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலா் முகமது சபாப், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்தில் கொடைக்கானல் கோட்ட வனச் சரகத்தைச் சோ்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பிறகு செய்தியாளா்களிடம் முகமது சபாப் கூறியதாவது: கொடைக்கானல் மேல் மலைக் கிராமங்களில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட வழக்கில் ரேஞ்சா் உள்ளிட்ட நான்கு போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதில் பலருக்கு தொடா்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் யூக்கலிப்டஸ் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாத கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்த மரங்களும், உயா் ரக மரங்களும் வெட்டிக் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மன்னவனூா் பகுதியில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படவுள்ளது. மேலும், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடுவதற்கான கட்டணத்தை வருகிற ஜன. 10-ஆம் தேதி முதல் இணைய வழியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.