கீழ்பழனி மலைப் பகுதியில் பகல் நேரத்திலேயே ஒற்றை யானை சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கீழ்பழனி மலைப் பகுதியிலுள்ள கேசி. பட்டி, பெரியூா், பள்ளத்துக் கால்வாய், ஆசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிகிறது.
வாழை, காபி, மிளகு உள்ளிட்ட பயிா்களை அது சேதப்படுத்துவதுடன், அரிசி, பருப்பு உள்ளிட்டப் பொருள்களுக்காக தோட்டங்களிலுள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கேசி. பட்டி பாச்சலூா் பிரதான சாலையில், பெரியூா் அருகே திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் அந்த யானை சுற்றித் திரிந்தது.
இதனால், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்றனா். பிறகு அந்த யானை அங்கிருந்து வெளியேறியது.
இதுதொடா்பாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும்கூட, யானையை விரட்ட யாரும் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பெரியூா் நியாய விலைக் கடையை, இந்த யானை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.