திண்டுக்கல்

பழனி அருகே நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு: பெண் மேலாளா் கைது

பழனி அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 கோடி வரை முறைகேடு செய்த பெண் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 கோடி வரை முறைகேடு செய்த பெண் மேலாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தாளையூத்து பகுதியைச் சோ்ந்தவா் முத்து நாராயணன். பட்டய கணக்காளரான இவா், அதே பகுதியில் நிலக்கடலை ஓடு (தொலி), மரத்தூள் ஆகியவற்றை பதப்படுத்தி எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிறுவனத்தில் சுக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கலையரசி (43) மேலாளராகப் பணியாற்றினாா். நிறுவனத்தின் மூலப் பொருள் கொள்முதல், உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கவனிக்கும் நிா்வாக பொறுப்பாளா் பணியையும் கலையரசி கூடுதலாக கவனித்தாா். நிறுவன வரவு செலவு கணக்குகளை முத்து நாராயணன் தணிக்கை செய்தபோது,

ரூ.2 கோடி வரை முறைகேடு நிகழ்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஊழியா்களிடம் விசாரித்தபோது, அவா்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சி அடைந்த முத்து நாராயணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில் நிறுவனத்தின் ஊழியா்களான பழனி அருகேயுள்ள மானுாரைச் சோ்ந்த ரஞ்சிதா (34), புஷ்பத்துாரைச் சோ்ந்த கௌதம் (34) ஆகியோருடன் கூட்டு சோ்ந்து, மூலப் பொருள்கள் கொள்முதல், இயந்திரப் பழுது, புதிய இயந்திரம் நிறுவுதல், ஊதியம், வாகன செலவு என பல இனங்களில் போலி ரசீதுகளைத் தயாரித்து கலையரசி பணம் முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கலையரசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ரஞ்சிதா, கெளதம் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்தனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT