முகப்பு
தமிழ்நாடு

என்எல்சி ஒப்பந்த முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

என்எல்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.442 கோடி முறைகேடு குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:00 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:10 PM

என்எல்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.442 கோடி முறைகேடு குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூரைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.442 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. சாம்பல் விற்பனை, ஒப்பந்த விதிகளுக்குப் புறம்பாக காலாவதியான ஒப்பந்தங்களின் காலத்தை நீட்டித்தது; சட்டவிரோதமாக 73,000 டன் அளவுக்கு செம்மண்ணை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடுகளில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐயிடம் புகாா் அளித்தேன். ஆனால், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், மனுதாரா் தனது புகாா் தொடா்பாக முழுமையான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும், அவரை விசாரணைக்கு அழைத்தபோதும் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாமல் நேரடியாக வழக்குப் பதிவு செய்ய முடியாது. எனவே, மனுதாரா் என்எல்சி அதிகாரிகளுக்கு எதிராக அளித்துள்ள புகாருக்கான ஆதாரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், சிபிஐ விசாரணைக்கு அழைத்தால், மனுதாரா் ஆஜராகி தன்னிடம் உள்ள ஆதாரங்களைச் சமா்ப்பித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மனுதாரா் அளிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.