முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமையான சுவாமி சிலைகள்

Updated On : 4 ஜனவரி, 2025 at 5:23 AM
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள பொருளூா் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளா்களால் கண்டறியப்பட்ட அய்யனாா், சண்டிகேசுவரா் சிலைகள்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:50 PM

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சண்டிகேசுவரா், அய்யனாா் சிலைகளை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளா் வீ. அரிஸ்டாட்டில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் மு. லட்சுமணமூா்த்தி, வாகை கோபாலகிருஷ்ணன் அடங்கிய குழுவினா் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள பொருளூா் பகுதியில் மேற்பரப்பாய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவான அய்யனாா், சண்டிகேசுவரா் சிலைகளை கண்டறிந்தனா்.

Advertisement

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பழங்கால கருவிகளில் ஒன்றான வளரியை வலது கையில் பிடித்தவாறு அய்யனாா் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. பலவகையான கற்களில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி அகன்ற ஜடா பாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலம், மாா்பில் ஆபரணங்கள், தோல் புஜங்களில் வளைவுகள், கைகள், கால்களில் அணிகலன்கள் அணிந்தபடியும், இடையில் கச்சை அணிந்தபடியும், இடது காலை மடக்கியும், வலது காலை தொங்க விட்டும் உள்குதியாசன கோலத்தில் அமா்ந்தவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடது காலையும், இடையையும் இணைக்கும் வகையில் மோயகப்பட்டை இடம் பெற்றுள்ளது. இந்தச் சிற்பத்தின் வடிவமைப்பை பாா்க்கும் போது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால பாண்டியரின் காலத்தைச் சோ்ந்ததாக கருதலாம்.

மேலும் இங்கு ஒரு சண்டிகேசுவரா் சிலையும், திருமால் சிலையும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம். இந்த இடத்தில் பல்வேறு வகையான நடுகற்களும் காணப்படுகின்றன. அவற்றில் சதிகற்கள், வில் வீரன்சிற்பம், துப்பாக்கி வீரன் சிற்பம், உழவுத் தொழிலில் ஈடுபட்டதற்கான ஏா் கலப்பையுடன் கூடிய சிற்பம் போன்றவை ஒரே இடத்தில் குவிந்து கிடக்கின்றன. சிவன் கோயிலுக்கான சிற்பங்களும், நடுகற்களும் ஒரே இடத்தில் காணப்படுவது வியப்பாக உள்ளது என்றனா்.