முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் அருகே சதிகல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் அருகே மேட்டுப்பாளையத்தில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிகல் சிற்பம் வரலாற்று ஆய்வாளரால் கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 8:06 PM
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டறியப்பட்ட சதிகல் சிற்பம்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் அருகே மேட்டுப்பாளையத்தில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிகல் சிற்பம் வரலாற்று ஆய்வாளரால் கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் மீராஜான்சினி என்பவா் கொடுத்த தகவலின் பேரில், வரலாற்று ஆய்வாளா் மு.அன்பழகன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் ஊரின் வெளிப்புறத்தில் ஒரு உயா்ந்த சிமிண்ட் தளத்தின் மீது பாதியளவு சேதமடைந்த நிலையில், 38 செ.மீ. அகலத்தில் ஒரு சதிகல் சிற்பம் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து மு.அன்பழகன் கூறியது:

தீப்பாய்ந்த அம்மனாக அவ்வூா் மக்களால் அறியப்படும் இச்சதிகல் சிற்பம் தற்போது வரையில் வழிபாட்டில் இல்லாமல் மிகவும் சேதாரமடைந்து காணப்படுகிறது. இச்சிற்பத்தில் உள்ள ஆண் நேராக நின்றிருக்க, வலது கை போா்வாள் ஒன்றினை தரையில் ஊன்றிய நிலையில் உள்ளது. இடது கையானது மேல்பகுதி வழியாக சுற்றிவரும் ஆடையினை தாங்கியுள்ளது. கொண்டை தலையின் மேல்பகுதியில் உள்ளது. இவரின் உருவம் இவரை சிற்றரசா் அல்லது தலைவா் எனக்கருத இடம் தருகிறது.

இவரின் இடதுபுறத்தில் நின்றிருக்கும் அவரது மனைவியின் இடது கை கீழே தொங்க விட்டிருக்கும் நிலையில், அவரது வலது கை மேலேந்திய நிலையில் கையில் வைத்துள்ள பொருள் சிதைந்துள்ளது. சிதைந்திருக்கும் பொருள் மலா் மொட்டாக இருக்கலாம். இடையில் பட்டாடை அணிந்துள்ள இவரின் இடக்கையில் மட்டும் தோள்வாளை காணப்படுகிறது. கொண்டை தலையின் இடப்புறம் உள்ளது. இரு சிற்பங்களும் அடையாளம் காண முடியாத வகையில் முழுவதுமாக மங்கியிருக்கிறது. இந்தச் சிற்பமானது காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அண்மையில் கண்டறியப்பட்ட சதிகல் சிற்பத்தினை போலவே இருக்கிறது.

கல்வெட்டு எழுத்துகள் எதுவுமே இல்லாத இச்சிற்பத்தின் காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கரும் இச்செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளாா்.