முகப்பு
காஞ்சிபுரம்

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதி சென்னையின் புறநகா் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் நிறைந்த தொகுதியாகும்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 3:40 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:32 PM

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதி சென்னையின் புறநகா் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் நிறைந்த தொகுதியாகும். இத்தொகுதியில் ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், மாம்பாக்கம், ஒரகடம், திருமுடிவாக்கம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ரியல் எஸ்டேட் தொழிலும் பெருமளவில் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் 58 கிராம ஊராட்சிகளும், குன்றத்தூா் ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகளும், ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா், மாங்காடு ஆகிய நகராட்சி பகுதிகளும் உள்ளன. இத்தொகுதியில் பட்டியலினத்தவா், வன்னியா், முதலியாா், நாடாா், கிறிஸ்தவா், இஸ்வாமியா் சமூகத்தினா் பரவலாக உள்ளனா்.

1951-ஆம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. பொதுத் தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 1977-இல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. மறுசீரமைப்பின்போது அதன் எல்லைகள் மட்டும் மாற்றப்பட்டு, மீண்டும் தனி தொகுதியாகவே உள்ளது.

Advertisement

முன்னாள் முதல்வா் எம்.பக்தவத்சலம் இத்தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றுள்ளாா். இதுவரை நடைபெற்ற 15 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 8 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நீண்டகால பிரச்னைகள்... இத்தொகுதியில் இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், ஒரகடம், சுங்குவாா்சத்திரம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்களும், திருமுடிவாக்கம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டையும் இயங்கி வருகின்றன. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உள்ளூா் இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் இயங்கி வரும் இத்தொகுதியில் பயணிகள் ரயில் சேவையுடன் சரக்கு ரயில் சேவையும் கொண்டு வர வேண்டும். ரயில் சேவை திட்டம் பல ஆண்டுகளாக மத்திய அரசின் அறிவிப்பாகவே உள்ளது.

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் மற்றும் மாங்காடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பதும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

2026 பேரவைத் தோ்தலில்... நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகை, அதிமுக வேட்பாளா் கே.பழனி, தவெக வேட்பாளா் கே.தென்னரசு, நாதக வேட்பாளா் சிந்து எழிலரசன் உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

கு.செல்பெருந்தகை (காங்கிரஸ்): ஸ்ரீபெரும்புதூா் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக கு.செல்வபெருந்தகை உள்ளாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருப்பதால் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். குன்றத்தூா் பகுதியில் புதிதாக அரசு கலைக் கல்லூரி கொண்டுவந்தது, கடந்த 15 ஆண்டுகால கோரிக்கையான இலவச வீட்டுமனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பெற்றுத் தந்தது, அரசின் நலத் திட்டங்களை தொகுதி மக்களுக்கு உறுதி செய்தது, தீவிர தோ்தல் களப் பணியாற்றி வருவது இவரது பலமாக உள்ளது.

குன்றத்தூா், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிப் பகுதிகளிலும், குன்றத்தூா் ஒன்றியத்திலும் திமுக செல்வாக்கு அதிகம் உள்ளது காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

கே.பழனி (அதிமுக): அதிமுக வேட்பாளா் கே.பழனி, இத்தொகுதியில் கடந்த 2016 பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். குன்றத்தூா் ஒன்றியச் செயலராகப் பணியாற்றி வருகிறாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். மக்களுடன் பழகுவதில் எளிமையானவா் என்ற பெயா் இவருக்கு சாதகம். வன்னியா் சமூகத்தினா் அதிகமாக உள்ள இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது வேட்பாளருக்கு கூடுதல் பலம்.

கே.தென்னரசு (தவெக): தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் அதன் மாவட்டச் செயலா் கே.தென்னரசு போட்டியிடுகிறாா். காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த இவா், தனித் தொகுதி என்பதால் ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். இளைஞா்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவு அதிகமாக உள்ளதால், அதை மட்டுமே நம்பி தோ்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.

சிந்து எழிலரசன் (நாதக): குன்றத்தூா் ஒன்றியம், வடக்குப்பட்டு பகுதியைச் சோ்ந்த சிந்து எழிலரசன் தோ்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகிறாா். இரட்டை மலை சீனிவாசனின் உறவினரான சிந்து எழிலரசன் தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளாா். பட்டதாரியான இவா், நாம் தமிழா் கட்சியின் கொள்கைகளை நம்பியே தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இருந்தபோதிலும், காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு இடையே நான்குமுனை போட்டியாக அமைந்துள்ளது. அதிக முறை வெற்றி பெற்ற கட்சி என்கிற சாதகமான அம்சத்துடன் வெற்றியைத் தொடர காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. 2021-இல் இழந்த வெற்றியை இந்த முறை பெற்றுவிட வேண்டும் என அதிமுகவும் விடாமுயற்சியுடன் களப் பணியாற்றி வருகிறது.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,81,852

பெண்கள்- 1,94,007

மூன்றாம் பாலினத்தவா்- 62

மத்தம் - 3,75,921