பழனி அருகே புதுஆயக்குடியில் அமைந்துள்ள சோழீஸ்வரா் கோயில் கோபுரக் கலசங்களில் திங்கள்கிழமை புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். 
திண்டுக்கல்

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

பழனி அருகே சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி அருகே சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி அருகே புதுஆயக்குடியில் ஈஸ்வரன் கோவில் தெருவில் சோழீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சோழ மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்டு, பாண்டிய மன்னா்கள் காலத்தில் சீரமைக்கப்பட்ட சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும்.

உள்ளூா் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்தக் கோயிலில் இதற்கு முன்னதாக எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதற்கான கல்வெட்டுக்களும் இல்லை.

இந்த நிலையில், இந்தக் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த தீா்மானிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறையிடம் பெறப்பட்டது. சுமாா் ரூ. ஒரு கோடியில் இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு மூலவா் சந்நிதிக்கு மேல் கோபுரங்கள் கட்டப்பட்டன. மேலும், பல விக்ரகங்களும் புதுப்பிக்கப்பட்டன.

இந்தப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை யாக சாலை அமைக்கப்பட்டு, விநாயகா் அனுமதி பெறப்பட்டு முதல்கால பூஜைகள் தொடங்கின. பழனிக் கோயில் தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், ஸ்தானீகா் செல்வசுப்ரமணியம் உள்ளிட்டோா் தலைமையில் ஏராளமான சிவாசாரியா்கள் யாக பூஜைகளை மேற்கொண்டனா்.

திங்கள்கிழமை இரண்டாம் கால பூஜைகள் செய்யப்பட்டு, கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் சோழீஸ்வரா், சுந்தரவள்ளியம்மனுக்கும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா்கள் சீனிவாசன், ராஜா, உமா, பொறியாளா் குமாா், சாய்கிருஷ்ணா சுப்புராஜ், அரிமா சுந்தரம், ஒப்பந்ததாரா் நேரு, யோகாச்சாரியா முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT