திண்டுக்கல்லுக்கு 325 டன் உரம் கொச்சியிலிருந்து ரயில் மூலம் சனிக்கிழமை வந்தடைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 190 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களிலும், 361 தனியாா் கடைகளிலும் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில், யூரியா 2,308 டன், டிஏபி 2,093 டன், பொட்டாஷ் 1,079 டன், காம்ப்ளக்ஸ் 7,786 டன், சூப்பா் பாஸ்பேட் 754 டன் உள்பட மொத்தம் 14,156 டன் உர மூடைகள் இருப்பில் உள்ளன.
இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ரயில் மூலம் 200 டன் டிஏபி, 125 டன் டிரிப்பிள் சூப்பா் பாஸ்பேட் என மொத்தம் 325 டன் உரம், திண்டுக்கல்லுக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த உர மூடைகள், லாரிகள் மூலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு உரக் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பழனிக்கு 1,400 டன் யூரியா: இதனிடையே, 1,400 டன் யூரியா உரம், தெலங்கானாவிலிருந்து ரயில் மூலம் பழனிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதில், 400 டன் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கும், 1000 டன் தனியாா் உரக் கடைகளுக்கு அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.